Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday 31 May 2014

பேய் இருக்கா, இல்லையா?…நம்பலாமா? நம்பப்படாதா?




பேய் இருக்கா, இல்லையா?…நம்பலாமா? நம்பப்படாதா? 
என்று ரஜினியையே கலவரப்படுத்தும் கேள்வியை வடிவேலு கேட்கும் காட்சி பிரபலமானது. நம்மில் சிலரும் இந்தக் கேள்வியுடன் அருகில் இருப்பவர்களைப் பதறவைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதேசமயம், கொடூர முகப் பேய், வெள்ளுடை தரித்த ஆவி களைத் திரைப்படங்களில் கண்டு பயந்து மகிழ்வதிலும் பலருக்கு ஆர்வம் அதிகம்.
தமிழில் அதீத ஒப்பனையுடன் நடிகர், நடிகைகள் 'ரொமான்டிக் லுக்' விடும் காதல் படங்களைத் தவிர்த்துவிட்டு, பேய்ப் படம் என்று அறிவிக்கப்பட்ட படங்களைக் கணக்கிட்டாலே, ஒரு நூறை நெருங்கும். 'யார்', 'மை டியர் லிஸா', 'ஜென்மநட்சத்திரம்', '13-ம் நம்பர் வீடு' 'வா அருகில் வா' போன்ற படங்கள் பேய்களைப் பிரபலமாக்கியவை. சமீபத்தில், 'யாவரும் நலம்', 'பீட்சா' போன்ற படங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டவை. மிகச் சமீபமாக 'யாமிருக்க பயமே' என்ற திரைப்படம் பேயுடன் நகைச்சுவை கலந்த கதையைக் கொண்டு எதிர்பாராத வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை நாயகன் கிருஷ்ணாவே நம்பியிருக்க மாட்டார்!
என்றாலும், அறிவியல்பூர்வமாக எந்த அடிப்படையும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிய கதைகள், திரைப்படங்கள் மக்களைக் கவர்வது ஏன்? பேயின் இருப்புபற்றிய சந்தேகம் இருந்தாலும் மனதில் கிலியுடன், பாதுகாப்பான வளையத்துக்குள் அமர்ந்து பேய்ப் படங்களைப் பார்க்கும் ரசிகர்களால் அந்த பய உணர்வை ரசிக்க முடிகிறது என்று உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தான் எழுதிய 'காஞ்சனை' கதைகுறித்த கேள்விக்கு "பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால், பயமாக இருக்கிறதே!" என்று புதுமைப்பித்தன் பதிலளித்திருக்கிறார். "நம் நினைவுகள்தான் பேய்கள்" என்று மர்மக் கதை மன்னனான ஸ்டீஃபன் கிங் குறிப்பிட்டிருக்கிறார். அவரது கதைகளை அடிப்படையாக வைத்துப் பல 'திகில்' திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆதி மனிதர்களாகக் குகைகளில் நாம் வாழ்ந்துவந்த காலகட்டத்தில்தான் நம்மிடையே பேய் பற்றிய பயம் வந்தது. ஒருவேளை, பேய் நம்பிக்கைதான் கடவுள் நம்பிக்கை தோன்றுவதற்கும் காரணமோ? விவசாயம், அறிவியல், கல்வி போன்ற விஷயங்கள் அறிமுகமாகாத அந்தக் காலகட்டத்தில், புதிரான சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஏதேனும் ஒரு 'சக்தி'தான் காரணம் என்று குகை மனிதர்கள் அஞ்சினர். உதாரணமாக, குகைக்கு வெளியே கற்கள் உருண்டோடினால்கூட, கண்ணுக்குப் புலப்படாத சக்திதான் அதற்குக் காரணம் என்று குகை மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள். இந்த பயம் நம் மனதின் எங்கோ ஓர் மூலையில் படிந்துவந்திருக்கிறது. அது இன்றும் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது.
கல்வியும் அனுபவமும் இந்த நம்பிக்கைகள் மீதான கேள்வியை நம்முள் எழுப்பியுள்ளதால், இந்த விஷயங்களைக் கதைகளில் மட்டும் ரசிக்கும் அளவுக்கு நம் மனம் பக்குவப்பட்டிருக்கிறது.
காட்டில் அமர்ந்து தவம் புரிந்த இரவுகளில், உடனடியாக விளக்க முடியாத ஒலிகள், அசைவுகளால் அச்சமுற்றதாக புத்தரே குறிப்பிடுகிறார். அறிவுபூர்வமாக அவற்றை அணுகிய புத்தர், தன் பயத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உணர்ந்தார்.
எனினும், கலைகளில் அறிவையும் தாண்டி கற்பனைகளே அதிகப் பங்கை வகிக்கின்றன. எனவே, பேய், டிராகுலா, ஓநாய் மனிதன் உள்ளிட்ட நிரூபணமாகாத விஷயங்கள்குறித்த கலைப்படைப்புகள் இன்றும் வெற்றிபெறுகின்றன. 'யாமிருக்க பயமே' அவற்றில் ஒன்று.
--
Thanks And Regards


No comments:

Post a Comment